சிவகங்கை அருகே திங்கள்கிழமை ஆட்டோவில் சென்ற பயணிகளை கதம்ப வண்டு கடித்து 5 பேர் காயமடைந்தனர்.
பனங்காடி அருகே கருமாந்தகுடியிலிருந்து சிவகங்கைக்கு திங்கள்கிழமை ஆட்டோவில் 5-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை வெட்டிக்குளத்தைச் சேர்ந்த தனசேகரன்(47) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அல்லூர் விலக்கு அருகே சென்ற போது, அந்த பகுதியில் திடீரென பறந்து வந்த கதம்ப வண்டுகள் ஆட்டோவில் இருந்த பயணிகளை கடித்தது.
இதில், ஓட்டுநர் தனசேகரன், கருமாந்தங்குடியைச் சேர்ந்த சந்திரா(55), கோமதி(27), நிரோஜா(24), எட்டியேந்தலைச் சேர்ந்த லெட்சுமி(40) ஆகிய 5 பேரும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.