சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் அருகே இலுப்பகுடியில் உள்ள பூர்ணா,புஷ்கலா தேவி சமேத ஆதினமிளகி அய்யனார் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சனிக்கிழமை காலை முதல் யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. திங்கள்கிழமை 5 ஆம் கால பூஜை நடைபெற்றது. காலை 10 மணியளவில் மூலவரான ஆதினமிளகி அய்யனார் கோபுரத்தின் கலசத்துக்கு புனித நீர் கொண்டு சிவாச்சாரியார்கள் அபிஷேகம் செய்தனர். அதன்பின்னர், பிற பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதையடுத்து, மூலவருக்கும், அம்பாளுக்கும் தைலம், திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பால், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்குப் பின் விஷேச தீப,தூபங்கள் காண்பிக்கப்பட்டன.
இவ்விழாவில் இலுப்பகுடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இலுப்பகுடி கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர்.