சிவகங்கை

தென்கரை பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

10th Sep 2019 08:05 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து  நாச்சியாபுரம் வழியாக காரைக்குடி செல்லும் சாலையில் தென்கரையில் தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தில் உடனே தடுப்புச் சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 திருப்பத்தூரிலிருந்து  நாச்சியாபுரம் வழியாக காரைக்குடி செல்லும் சாலையில் தென்கரை அருகே தனியார் பள்ளி எதிரே வளைவில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் இடதுபுறத்தில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்து இடிந்துள்ளது. 
இந்த சாலையின் வழியாக மானகிரி, கல்லல், தேவகோட்டை, காரைக்குடி, தளக்காவூர், திருப்பத்தூர், இளங்குடி மருதங்குடி, கம்பனூர், தொரட்டி, தட்டட்டி உள்ளிட்ட பல ஊர்களுக்குப் பேருந்துகள் சென்று வருகின்றன.  தனியார் மருத்துவமனைக்கு அவசர ஊர்தியும் இவ்வழியாக சென்று வருகிறது. மேலும் தினந்தோறும் பள்ளி வாகனம்,  பேருந்துகள், லாரிகள், வேன் மற்றும் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றன. இந்த பாலம் அமைந்துள்ள இடம் சாலையின் வளைவு பகுதியாக உள்ளது. 
இப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்களும், இரவு நேரத்தில் வரும் வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறினால் இந்த பாலத்தில் விழுந்து விபத்துள்ளாக அதிக வாய்ப்புள்ளது. இந்த பாலத்தின் ஒரு புறம் கண்மாயாகவும், மற்றொருபுறத்தில் வயல் பகுதியாகவும் உள்ளது. 
சேதமடைந்துள்ள இந்த பாலத்தின் தடுப்பில் மண் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பாலத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், அக்கிராம பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT