சிவகங்கை

சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 02:24 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இக் கூட்டமைப்பின் சிவகங்கை வட்டாரத் தலைவர்கள் பஞ்சுராஜ், முத்தையா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அ.சங்கர் சிறப்புரையாற்றினார்.
இதில் தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வியை நிலைகுலைய செய்யும் அரசாணை 145, 101 மற்றும் 102-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகை நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த பிரபாகர், முத்துச்சாமி, சுரேஷ்குமார், பாண்டி, ராம்குமார், முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, திருப்புவனம், காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, இளையான்குடி, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT