சிவகங்கை

திருப்புவனம் சேதுபதி நகரில் வாரச்சந்தைக்கு தடை: விவசாயிகள் பாதிப்பு

4th Sep 2019 07:51 AM

ADVERTISEMENT

உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக திருப்புவனம் சேதுபதி நகரில் நடைபெற்று வந்த வாரச்சந்தை ரத்து செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 திருப்புவனம் சேதுபதி நகரில் நடைபெற்று வரும் வாரச் சந்தையால் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வரும் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கூட்டுக் குடிநீர் திட்டம் பாதிப்படைந்து வருவதாகக் கூறி  சேதுபதி நகர் வாரச்சந்தைக்கு தடை விதிக்க வேண்டும் என விருதுநகரைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, நீதிமன்றம் சந்தை நடத்துவதற்கு தற்காலிக தடை ஆணை பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து திருப்புவனத்தில் நடைபெற்று வந்த வாரச் சந்தையை ரத்து செய்வதாக பேரூராட்சி நிர்வாகம் அண்மையில் அறிவித்தது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி பேரூராட்சி அலுவலர் ஒருவர் கூறியது : உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, திருப்புவனம் சேதுபதி நகரில் நடைபெற்று வந்த வாரச்சந்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சந்தை நடைபெறுவதால் வைகையாற்றுக்குள் செயல்படும் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கூட்டுக் குடிநீர் திட்டம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சந்தை நடைபெறாது என்றார்.
நாளை முழுக் கடையடைப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரச் சந்தையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, நகர் முழுவதும் வியாழக்கிழமை (செப்.5) முழுக் கடையடைப்பு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இது குறித்து திருப்புவனம் வர்த்தக சங்க கூட்டமைப்பின் தலைவர் சீதாராமன் கூறியது: திருப்புவனம் சேதுபதி நகரில் நடைபெற்று வந்த வாரச் சந்தை, உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தடை ஆணையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 
     எனவே, அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலான வாரச் சந்தையை தொடர்ந்து நடத்த, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இதனை வலியுறுத்தி, வியாழக்கிழமை திருப்புவனம் நகரில் முழுக் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT