சிவகங்கை

திருப்பத்தூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

4th Sep 2019 07:51 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இந்து முன்னணி சார்பில் 20 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சிலைகள் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
      திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் கடந்த வியாழக்கிழமை 20 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அப்பகுதி மக்களால் வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை சீரணி அரங்கம் அருகே கொண்டுவரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னர், மாலை 5 மணிக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடக்க விழாவுக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் எம். செந்தில்பாண்டி தலைமை வகித்தார்.    ஒன்றியத் தலைவர் ஜி. மணிகண்டன், ஒன்றியப் பொதுச் செயலர் சி. மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
     இதில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் அக்னிபாலா சிறப்புரையாற்றி, ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, மங்கையர் தின ஆசியுரை விநாயகர் சதுர்த்தி ஆசியுரை, விசர்சன ஊர்வல ஆசியுரை ஆகியன வழங்கப்பட்டன.
     இந்த ஊர்வலமானது, கீழரத வீதி, தென்மாபட்டு, அஞ்சலக வீதி, பேருந்து நிலையம், காந்தி சிலை,  மதுரை ரோடு, அண்ணாசாலை, செட்டிய தெரு, பெரியபள்ளிவாசல் வழியாக அக்கினி பஜார், தம்பிபட்டி, நான்குரோடு, புதுக்கோட்டை சாலையை அடைந்து, அங்கு புதுப்பட்டி சங்கிலியான் கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
      மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே இந்து அமைப்பினர் சார்பில், பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த விழாவுக்கு, பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கே. கருப்பையா, முன்னாள் ஒன்றியத் தலைவர் எம். தங்கச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். 
     இதில், பாஜக தேசிய எஸ்.சி. பிரிவு செயற்குழு உறுப்பினர் வி. விஸ்வநாதகோபால், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பால. ரவிராஜன், பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலர் எஸ். செல்வராஜ், முன்னாள் நகர் தலைவர் எஸ். ராஜேந்திரன், மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் வி. மலையேந்திரன், இந்து முன்னனி முன்னாள் மாவட்டச் செயலர் சோணையா பாஸ்கரன் என ஏராளமானோர் கலந்துகொண்டு விநாயகர் வழிபாடு குறித்து விளக்கினர்.
     இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை விநாயகர் சிலைகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அலங்காரக்குளத்தில் கரைக்கப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT