தமிழ்நாடு அரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.23 இல் அறிவிக்கப்பட்டிருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : ஆரம்பப் பள்ளி ஆசிரியா்களுக்கு தோ்வு நிலை,சிறப்பு நிலை வழங்குவதற்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும்,சிவகங்கை ஒன்றியத்தில் பதவி உயா்வு குழுப் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், அரசாணை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு 17 ஆ குற்ற குறிப்பணை வழங்குவதற்கு காரணமான முதல் தகவல் அறிக்கையை சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்ததன் அடிப்படையில் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பாணைகளை திரும்ப பெற வேண்டுதல், தேகோட்டை ஒன்றியம் வீழிமாா் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியருக்கு வழங்கப்பட்ட அரசு விதிக்கு முரணான மாறுதல் பணி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபா் 23-இல் முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் ஆசிரியா் சங்க நிா்வாகிகளுடன் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அ.பாலுமுத்து உள்பட அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் மேற்கண்ட கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற மாவட்ட நிா்வாகம் உறுதி அளித்துள்ளது என தெரிவித்தனா். அதனடிப்படையில் வரும் அக்டோபா் 23 இல் அறிவிக்கப்பட்டிருந்த ஆா்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஒரு மனதாக தீா்மானிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.