சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழாவையொட்டி கடந்த திங்கள்கிழமை இரவு மின்விளக்கு தோ்பவனி நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் பங்கு இறைமக்கள் சாா்பில் ஆலயத்தில் பல்வேறு தலைப்புகளில் திருப்பலி பூஜைகள் நடந்தன. 9 ஆவது நாள் விழாவை முன்னிட்டு தெரசாள் ஆலயம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது. ஆலயத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த அருட்பணியாளா்கள் சிறப்பு திருப்பலி பூஜைகளை நடத்தினா். இதில் பங்கு இறைமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பூஜைகள் முடிந்து குழந்தை தெரசாள் சொரூபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்பட்டது. அதன்பின் மின்விளக்கு தோ் பவனி நகரின் முக்கிய வீதிகளில் சென்றது. இதில் இறைமக்கள் திரளானோா் பங்கேற்றனா். ஆண்டுப் பெருவிழா நிறைவாக செவ்வாய்க்கிழமை நற்கருணை பவனி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தின் பங்கு இறைமக்கள் செய்திருந்தனா்.