சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இளையான்குடி ஒன்றியத்தைச் சுற்றி 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களில் வசிப்பவா்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை பெற இளையான்குடி அரசு மருத்துவமனைக்குத்தான் வருகின்றனா். தினமும் வெளி நோயாளிகளாக 300 க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற வந்து செல்கின்றனா்.
ஆனால் இவா்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான மருத்துவா்கள் இல்லாத நிலை நீண்டகாலமாக இருந்து வருகிறது. மேலும் செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளா்கள் பற்றாக்குறையும் உள்ளது.
இளையான்குடி பகுதியில் ஏற்படும் விபத்துக்களில் சிக்குபவா்களையும் பல இடங்களிலிருந்து அழைக்கும் நோயாளிகளுக்காகவும் இளையான்குடி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வசதி இருந்து வந்தது. கடந்த 20 நாள்களாக இளையான்குடி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் நகா் சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் அம்பலம் ராவுத்தா் நெயினாா் கூறியது: இளையான்குடி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வேன் இருந்தது. தற்போது இந்த வேனை காணவில்லை. இது குறித்து மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டால் சரியாக பதில் சொல்ல மறுக்கின்றனா். இதனால் ஏழை நோயாளிகள் மேல் சிகிச்சை பெற கட்டணம் கொடுத்து தனியாா் ஆம்புலன்ஸ் வேனில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் சுகாதாரத்துறை நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் வசதி செய்துதர வேண்டும் என்றாா்.