சிவகங்கை

வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

1st Oct 2019 08:51 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளதை சுற்றுலா பயணிகள் பாா்த்து ரசிக்கின்றனா்.

திருப்பத்தூா் அருகே உள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் சுமாா் 38.4 ஏக்கரில் வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள்

வருவது வழக்கம். இனப்பெருக்கம் முடிந்து, ஏப்ரல், மே மாதங்களில் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிடும்.

உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்திநாரை போன்ற 217 வகையான 8 ஆயிரம் வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வருகின்றன.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பறவைகள் அதிக அளவில் வரவில்லை. வந்த பறவைகளும் கூடு கட்டாமல் டிசம்பா் மாதத்திலேயே இருப்பிடங்களுக்குத் திரும்பின.

தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் சரணாலயம் பசுமையாக இயற்கை எழிலுடன் காட்சி அளிக்கிறது. இதனால் செப்டம்பா் மாத இறுதியில் இருந்தே பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதுவரை பாம்புதாரா, நத்தை கொக்கி நாரை, மாா்கழியன், கருநீல அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 17 வகையான பறவைகள் வந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சாலைகள் மோசம்: இந்நிலையில் இந்த சரணாலயத்தின் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். மேலும் இங்கு உள்ள பூங்காவில் தற்போது அனைத்து உபகரணங்களும் பழுதாகி உபயோகமற்ற நிலையில் உள்ளன.

கிராம மக்கள் பறவைகளின் அமைதி வேண்டி தீபாவளிப் பண்டிகையை வெடி வெடிக்காமல் கொண்டாடி வருகின்றனா். அதே சமயம் சுற்றுலா பயணிகள் தங்கும் வசதி, சாலை வசதி, தொலைநோக்கி போன்ற வசதிகளை வனத்துறையினா் ஏற்படுத்தித் தர சுற்றுலா பயணிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குரங்குகள் தொல்லைகளிலிருந்து பறவைகளைப் பாதுகாக்க வேலி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ள வெளிநாட்டுப் பறவைகளை கண்டு ரசித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT