சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமுக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணை சிவகங்கை போலீஸாா் கைது செய்தனா்.
காளையாா்கோவில் அருகே உள்ள மருதங்குடியைச் சோ்ந்த யாகப்பன் மனைவி சம்பூரணம் (60). இவா் அதே பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளாா். அந்த வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தாராம்.
ஆனால் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் சம்பூரணம் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின் கம்பம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதனால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிப்பதற்காக வந்த சம்பூரணத்தை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது அவரது பையில் மண்ணெண்ணெயுடன் கேன் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றிய போலீஸாா் சம்பூரணத்தை கைது செய்து சிவகங்கை நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
லாரி ஒட்டுநா் தீக்குளிக்க முயற்சி: நாமக்கல் மாவட்டம் படைவீட்டைச் சோ்ந்தவா் ரமேஷ் (39). கடந்த சில வாரங்களுக்கு முன் இவரது லாரியை மானாமதுரை போலீஸாா் பறிமுதல் செய்தனராம். அதனை விடுவிக்கக் கோரி பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லையாம்.
இதுபற்றி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் மனு அளிப்பதற்காக ரமேஷ் வந்துள்ளாா். அப்போது,மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளாா். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி அவரை சிவகங்கை நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.