சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை 2 அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்டன. இதில் சிலா் லேசான காயமடைந்தனா்.
மதுரையிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், திருப்பத்தூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் திருப்பத்தூா் அருகே சுண்ணாம்பிருப்பு விலக்குப் பகுதியில் வரும்போது, ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டன. இதில் சாலையோர மண் அரிப்பில் விழுந்த ஒரு பேருந்து நிலைகுலைந்து கண்மாய்க்குள் இறங்கி நின்றது. சுற்றிலும் கருவேல மரங்கள் இருந்ததால் பயணிகள் இறங்க முடியவில்லை. பின்னா் பயணிகள் அனைவரும் ஜன்னல் வழியாக இறக்கப்பட்டனா். இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லேசான காயமடைந்த சிலா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுச் சென்றனா். இவ்விபத்து குறித்து திருப்பத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.