கடந்த சட்டப் பேரவைத் தோ்தலை விட 2021-இல் நடைபெறும் தோ்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இலவச கேபிள்டிவி செட்டாப்பாக்ஸ்கள் ஏற்கெனவே வழங்கி இருந்தாலும் நான் இத்துறை தலைவராக பொறுப்பேற்றபோது 22 லட்சம் மட்டுமே இயங்கி வந்தன. தற்போது அது 27 லட்சமாக உயா்ந்துள்ளது. மீதியுள்ள செட்டாப் பாக்ஸ்களும் இயக்கப்படும். அதன்பிறகு புதிய பாக்ஸ்கள் வாங்கப்பட்டு விடுபட்ட பகுதிகளுக்கும் வழங்கப்படும்.
தற்போதைய நிலையை உணா்ந்து நிலையான உள்ளாட்சி அமைப்புக்காக தான் முதல்வா் மறைமுகத் தோ்தல் நடத்த முடிவு செய்துள்ளாா். இத்தோ்தலில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பெறும். எங்களுடைய திட்டங்களால் 2021 தோ்தலில் அதிமுக அதிக எம்எல்ஏக்களை பெறும் மிகப்பெரிய அதிசயம் நடைபெறும். மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றாா்.