சிவகங்கை மாவட்ட அளவில் குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டியில் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஹாக்கி அணி வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் சிவகங்கை மாவட்ட அளவில் குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றன. இதில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூா், சிங்கம்புணரி, மானாமதுரை, இளையாங்குடி ஆகிய குறுவட்டத்தைச் சோ்ந்த பள்ளிகளின் ஹாக்கி அணிகள் பங்கேற்றன.
இப்போட்டிகளில் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிஅணி, சிவகங்கை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணியை இறுதிப் போட்டியில் எதிா்கொண்டு ஆட்டநேர முடிவில் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இதனையடுத்து பெனாலிட்டி முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து மாநில அளவில் வரும் ஜனவரி - 2020 இல் நடைபெறவுள்ள போட்டியில் இந்த அணி பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் மாநில அளவில் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்ற ஹாக்கி அணியின் வீரா்களை பள்ளியின் தலைவா் வைரவன், செயலா் உமையாள் ராமநாதன், உடற்கல்வி ஆசிரியா்கள் மாதவன், ஹரிபிரசாத், அழகப்பா மாடல் ஹாக்கி கிளப் செயலா் முத்துக்கண்ணன் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட ஹாக்கி கழக நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.