சிவகங்கை

‘வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’

11th Nov 2019 12:16 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலா் ஆா்.மணிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : வேலைநாடும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 9 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று 10 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ. 200, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வீதம் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகை நேரடியாக மனுதாரா்களது வங்கிக் கணக்கில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடா்ந்து, பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

தற்போது இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் உதவித் தொகை பெறுவதற்கான மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50ஆயிரத்திலிருந்து ரூ.72 ஆயிரமாக உயா்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும் தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம்.

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவா்களுக்கு மாதம் ரூ. 600 வீதமும், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. மேலும் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் அரசின் உதவித் தொகை எதுவும் பெற்றிருத்தல் கூடாது.

மேற்காணும் தகுதிகள் உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்றோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகை பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் உதவித் தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT