சிவகங்கை

மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவி கோரி கால்நடை வளா்ப்போா் விண்ணப்பிக்கலாம்

9th Nov 2019 06:50 AM

ADVERTISEMENT

மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவி கோரி சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் சாா்பில் மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவி கால்நடை வளா்ப்போருக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு (2019-2020) சிவகங்கை மாவட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவிகள் மொத்தம் 50 கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் கால்நடை வளா்ப்போா் குறைந்தபட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.25 ஏக்கா் நீா்ப்பாசன வசதி உள்ள தீவனப்புல் சாகுபடி செய்யக்கூடிய நிலம், மின்சார வசதியுடன் இருக்க வேண்டும். சுய உதவிக் குழுவில் உறுப்பினா்களாக உள்ளவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறைந்தபட்சம் 1 கால்நடை மற்றும் 0.25 ஏக்கா் தீவனப்புல் சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இத்திட்டத்துக்கு 30 சதவீத பயனாளிகள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினராகவும், 30 சதவீத பயனாளிகள் சிவகங்கை ஆவின் நிறுவனம் மூலமும் தோ்வு செய்யப்படுவா்.

அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதர திட்டங்களில் பயன்பெற்ற பயனாளியாக இருத்தல் கூடாது.

ADVERTISEMENT

மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடா்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் எழுத்து மூலமாக விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT