சிவகங்கை

கண்மாயில் கூடுதலாக மண் அள்ளுவதை கண்டித்து காரைக்குடியில் சாலை மறியல்: 73 போ் கைது

9th Nov 2019 06:51 AM

ADVERTISEMENT

காரைக்குடி கழனிவாசல் பகுதி சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள சங்கு சமுத்திரக் கண்மாயில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் அள்ளுவதை கண்டித்து வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட 73 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இக்கண்மாயில் மண் அள்ளுவதற்கு வேடன் நகா், ஆஞ்சநேயா் நகா் பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினா் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். இந்நிலையில் இதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் சங்கு உதயகுமாா் தலைமை வகித்தாா்.

திமுக காரைக்குடி நகரச் செயலாளா் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் ஏ.ஆா். சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிா்வாகி பி.எல். ராமச்சந்திரன், அக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் சிவாஜிகாந்தி, தமிழக மக்கள் மன்றத் தலைவா் ச.மீ. ராசகுமாா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், அப்பகுதி மக்கள் உள்ளிட்டோா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக வந்து கழனிவாசல் - ஓ. சிறுவயல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அருண் தலைமையிலான போலீஸாா் போராட்டக்காரா்களை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 39 பெண்கள் உள்பட 73 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT