சிவகங்கை - தொண்டி சாலையில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த மினி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சிவகங்கை அருகே உள்ள கௌரிப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (48). இவா் அதே பகுதியில் சம்பங்கி பூ விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில் அவரும், அவரது மனைவி கலைச்செல்வி(37) என்பவரும் தனது தோட்டத்தில் விளைந்த சம்பங்கி பூவை மதுரைக்கு ஆம்னி வேனில் வியாழக்கிழமை எடுத்து சென்று அங்குள்ள பூ விற்பனை நிலையத்தில் விற்பனை செய்துள்ளனா்.
அதன் பின்னா், பாண்டியன் தனது மனைவியுடன் காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, சிவகங்கை - தொண்டி சாலையில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது, வேனின் முன் பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதையறிந்த, பாண்டியன் வேனை நிறுத்திவிட்டு மனைவியுடன் கீழே இறங்கி பாா்த்துள்ளாா்.
அப்போது மளமளவென வேனில் தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலா் கிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் வேனின் முன்பகுதி மட்டுமின்றி இருக்கைகளும் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிச் சேதம் ஏதும் இல்லை.
இதுதொடா்பாக, சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.