அமெரிக்காவில் நடைபெறவுள்ள தமிழறிஞர்கள் மாநாட்டில் "கீழடி எங்கள் தாய்மடி' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் பேச்சாளருமான மதுக்கூர் ராமலிங்கம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக அரசு சார்பில் தொல்லியல்துறை மூலம் 5-ஆம் கட்ட அகழ்வராய்ச்சி நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரட்டைச் சுவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் திண்டுக்கல் பாண்டி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மு.கந்தசாமி, ஆர்.கே.தண்டியப்பன், வெ.கருப்புச்சாமி, ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கீழடிக்குச் சென்று அகழ்வராய்ச்சியின் போது சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை வியாழக்கிழமை மாலை பார்வையிட்டனர்.
பின்னர் மதுக்கூர் ராமலிங்கம் கூறியது: முதற்கட்டமாக நடந்த ஆய்வுகளில் கிடைத்த ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட அரிய பொருள்களை மத்திய அரசு பெங்களூருவுக்கு கொண்டு சென்று விட்டது.
இதை தமிழக அரசிடம் ஒப்படைத்து இந்த பொருள்களை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்கள் பயன்படுத்திய பண்பாட்டு அடையாளங்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.
5-ஆம் கட்ட ஆய்வில் கிடைக்கும் பொருள்களை படம் எடுக்கக் கூடாது. செய்தி வெளியிடக் கூடாது என தமிழக அரசு கெடுபிடி செய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது.
அமெரிக்காவில் விரைவில் உலக அளவிலான தமிழறிஞர்கள், தொல்லியல் துறை வல்லுனர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதில் "கீழடி எங்கள் தாய்மடி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது என்றார்.