சிவகங்கை

"இளைஞர்கள் உயர்கல்வி பயில்வது அவசியம்'

31st Jul 2019 08:09 AM

ADVERTISEMENT

இளம் தலைமுறையினர் வாழ்க்கை தரத்தில் மேம்பட வேண்டுமெனில் உயர்கல்வி பயில்வது அவசியம் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தெரிவித்தார்.
காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் கல்வியியல் மற்றும் கலைப் புலங்கள் துறை சார்பில் காமராஜரின் 117-ஆவது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியது: 
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பல்துறையில் நிகழும் சாதனைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. இன்றைய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அனைத்துமே சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும். நமது நாட்டின் பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பொறியியல் கல்லூரி மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடங்கள் முதன்மை பாடங்களாகவும், சமூக அறிவியல் மற்றும் கலைப் பாடங்கள் துணைப் பாடங்களாகவும் கற்று தரப்படுகிறது. 
பெருந்தலைவர் காமராஜர் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர். அனைவரும் சிறந்த கல்வியை கற்க வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிறுத்தியவர். தற்போது இந்தியாவில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை 25 சதவீதமாக உள்ளது.  அடுத்த 15 ஆண்டுகளில் இது 50 சதவீதமாக உயர வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 48.6 சதவீதமாக உள்ளது. இந்நிலை மாறி பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் ஏதேனும் ஒரு துறையில் சேர்ந்து பயில முன் வர வேண்டும்.
 ஏனெனில் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கை தரத்தில் மேம்பட வேண்டுமெனில் உயர் கல்வி பயில்வது அவசியமாகும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் இந்து நாடார் செந்தில்குமார் நாடார் கல்லூரியின் முதல்வர் பி. சுந்தரபாண்டியன் காமராஜர் குறித்து பேசினார். முன்னதாக கல்வியியல் புல முதன்மையர் பேராசிரியர் பி.பால் தேவநேசன் வரவேற்றார். கலைப்புல முதன்மையர் பேராசிரியர் கே.ஆர்.முருகன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT