சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவாலயங்களில் திங்கள்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு உள்பட்ட சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழாவை முன்னிட்டு பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு யாகம் நடைபெற்று புனித கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திருத்தளிநாதர் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமாக பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீர், சொர்ணம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.
அதே நேரத்தில் திருத்தளிநாதருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் பிரகாரத்தை பக்தர்களின் ஹரஹர சங்கர கோஷத்துடன் மும்முறை வலம் வந்தார்.
இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெண்கள் நெய்விளக்கேற்றி சிவனை வழிபட்டனர். சீதளிமேல்கரையில் உள்ள ஆதித்திருத்தளிநாதர் ஆலயத்திலும் நந்தீஸ்வரருக்கும் சிவனுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.