சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியரேந்தலில் சவுடு மண் குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
வேதியரேந்தல் கிராமத்தில் வைகை ஆற்றுக்கு அருகில் தனியார் பட்டா நிலத்தில் சவுடு மண் அள்ள அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வாங்கியவர்கள் மண் அள்ளப்பட உள்ள இடத்துக்கு பாதை அமைத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் சவுடு மண் அள்ளுவதால் வேதியரேந்தல், செங்கோட்டை, ஆலம்பச்சேரி, செங்கோட்டை காலனி ஆகிய பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போகும் என புகார் கூறி, இதற்கான அனுமதியை ரத்து செய்யக் கோரியும், குவாரிக்கு பாதை அமைப்பதற்காக மேலநெட்டூர் கண்மாய் கரையை சேதப்படுத்தியதைக் கண்டித்தும் அப்பகுதி கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இதில், மாவட்டசெயலாளர் வீரபாண்டி, ஒன்றியச் செயலாளர் ஆண்டி, நகர்ச் செயலாளர் விஜயக்குமார், நிர்வாகிகள் வீரையா, முனிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன்பின் வட்டாட்சியர் யாஸ்மின்-னிடம் போராட்டக் குழுவினர் கோரிக்கை மனுவை வழங்கினர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.