சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் ஒரு மாதத்துக்கு முன்பு பெருமாள் கோயிலில் திருடிச் சென்ற ஐம்பொன் சிலைகளை திருடர்கள் வியாழக்கிழமை இரவு மீண்டும் கோயிலிலேயே வீசிச் சென்றனர்.
இடைக்காட்டூரில் பழமையான கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது. தகுந்த பாதுகாப்பின்றி உள்ள இக் கோயிலுக்குள் கடந்த மாதம் 19 ஆம் தேதி நுழைந்த திருடர்கள் ஒன்றரை அடி உயரமுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி மற்றும் கரியமாணிக்க பெருமாள் ஆகிய 3 உற்சவ மூர்த்தி ஐம்பொன் சிலைகளையும், அவற்றின் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்க நகைகளையும் திருடிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து சிலைகளை திருடிச் சென்றவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கோயில் வாசலில் திருடுபோன சிலைகள் கிடப்பதைக் கண்ட கிராமத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிலைகளை மீட்டு கோயிலில் வைத்தனர். உற்சவ மூர்த்தி சிலைகளுக்கு உரிய பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் கோயிலுக்குள் மூலவர் சன்னிதியில் வைக்கப்படும் என அர்ச்சகர் சீனிவாசன் தெரிவித்தார்.
சிலைகளை கொள்ளையர்கள் மீண்டும் கோயிலில் விட்டுச் சென்றது ஏன் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.