லாபத்தில் இயங்கி வரும் ரயில்வேதுறையை தனியாருக்கு தாரைவார்க்க அனுமதிக்க முடியாது என எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்தார்.
மானாமதுரையில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ரயில்வே தொழிற்சங்கத்தின் அங்கீகாரத் தேர்தலுக்கு ஆதரவு கேட்டு ரயில் நிலையம் முன்பு புதன்கிழமை மாலை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ. மதுரை கோட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளர் கண்ணையா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிவரும் ரயில்வே துறையை மத்திய அரசு தனியார்மயமாக்கப் பார்க்கிறது. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வாரணசியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி ரயில்வேயை தனியார்மயமாக்க மாட்டோம் என உறுதியளித்தார்.
ஆனால் தற்போது இந்த உறுதிக்கு எதிராக ரயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ரயில்வே நிர்வாகத்தில் குறைந்த லாபத்தில் இயங்கும் பிரிவுகளை தனியார்மயமாக்கி மேம்படுத்த வேண்டும்.
பயணிகள் பயணச்சீட்டுக்காக மத்திய அரசு வழங்கும் ரூ.42 ஆயிரம் கோடி மானியத்தை பொது பட்ஜெட்டுக்குள் கொண்டுவந்து மானியத்தை ரத்து செய்வதற்காக தனியார்மயமாக்கல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் ரயில்வேதுறை தனியார்மயமாக்கப்பட்டால் தற்போது ரயில்வேயில் பணியாற்றும் ரயில்வே தொழிலாளர்கள் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஆட்கள் நியமனம் என்பது இல்லாமல் போய்விடும்.
இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிலைதான் ரயில்வே நிர்வாகத்துக்கும் ஏற்படும். இனி தமிழகத்தில் புதிய ரயில்கள் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றார்.
இக்கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. கோட்டச் செயலர் ரபீக், துணைத் தலைவர் சீதாராமன், மானாமதுரை கிளைச் செயலாளர் ரவீந்தரதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.