சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரயில்வே கடவுப்பாதையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரையில் மதுரை - ராமேசுவரம் புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே கடவுப்பாதையின் மேல் மேம்பாலம் கட்டப்பட்டதையடுத்து அந்த கடவுப்பாதையை மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து கடந்த 6 ஆம் தேதி அந்த கடவுப்பாதையை மூடும் நடவடிக்கைக்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டது. இந்த பாதை மூடப்பட்டால் சுமார் 2 கி.மீ., தூரம் பாலத்தில் பயணித்து பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் இந்த ரயில்வே கடவுப்பாதையை மூடக்கூடாது என தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் மனு கொடுத்தார். இந்நிலையில் சனிக்கிழமை மானாமதுரை வந்த கார்த்தி சிதம்பரம் மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள ரயில்வே கடவுப் பாதையை பார்வையிட்டு இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவும், அதுவரை ரயில்வே கடவுப்பாதையை பயன்பாட்டில் வைத்திருக்கவும் ரயில்வே அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிச் சென்றார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரயில்வே கடவுப்பாதை அருகே திரண்ட பொதுமக்கள், மற்றும் அரசியல் கட்சியினர் கடவுப்பாதையை மூடக்கூடாது, சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ரயில்வே கடவுப்பாதையை மூடும் திட்டத்தை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.