சிவகங்கை

சுழற்காற்றினால் செவ்வாழை மரங்கள் சேதம்

15th Jul 2019 07:26 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள செவ்வாழை மரங்கள் சுழற்காற்றுக்கு சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சிவகங்கை, கண்டுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருவ நிலையில் உள்ள வாழை மரங்கள் சேதமடைந்து வருவதால், விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். 
இது குறித்து கண்டுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பால. கார்த்திகேயன் கூறியது: கண்டுப்பட்டி பகுதியில் இயற்கை முறையில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2,500 செவ்வாழை பயிரிட்டேன். உழவு, பாத்தியமைத்தல், நடவு செய்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்காக இதுவரை ரூ.4 லட்சம் வரை செலவாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த செவ்வாழை மரங்களில், கடந்த சில நாள்களாக வளர்ச்சியின்றி இலைகள் அனைத்தும் கருகத் தொடங்கின.மேலும், வாழைத்தாரில் காய்கள் பெருக்கத்துக்கான அறிகுறி இல்லாமல் இருந்தது. 
எனவே, வேளாண் துறையைச் சேர்ந்த நிபுணர்களை அழைத்து வந்து ஆய்வு செய்தபோது, கடந்த சில வாரங்களாக வீசிய பலத்த சுழற்காற்றினால் உள்தண்டுகள் பாதிப்படைந்துள்ளன என்றும், மரத்துக்கு தேவையான சத்துகள் நிலத்திலிருந்து கிடைக்கவில்லை என்றும், இதனால் செவ்வாழை மரத்தில் விளைச்சலை எதிர்ப்பார்க்க முடியாது என்றும் தெரிவித்தனர். 
இதனைக் கவனத்தில்கொண்டு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பாதிப்படைந்த வாழை விவசாயிகளுக்கு உதவ முன் வரவேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT