இந்தியா ஒரு மதம், ஒரு மொழி கொண்ட நாடல்ல, பன்முகத்தன்மை கொண்ட நாடு என்று, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசினார்.
காரைக்குடி அருகே புதுவயலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நன்றியறிவிப்புக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் அளித்து என்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தொகுதி வளர்ச்சியில் அனைவருக்கும் பொதுவான பிரதிநிதியாகச் செயல்படுவேன்.
மத்தியில் பாஜக அதிக பலத்துடன் ஆட்சியில் உள்ளது. பாஜக பாசிஸ எண்ணம் கொண்ட கட்சி. அவர்கள் எண்ணமெல்லாம் இந்தியாவை இந்து நாடாகவும், ஹிந்தி பேசுகின்ற நாடாகவும் மாற்றவேண்டும் என்பதுதான். இந்தியா பன்முகத்தன்மை உள்ள நாடு. பல மதங்கள், பல மொழிகள் உள்ள நாடு. ஆனால், ஹிந்தியை திணிப்பதற்கு அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார் கள். எனவே, திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து நாம் போராட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், திமுக மாவட்டச் செயலர் கே.ஆர். பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் மு. தென்னவன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப. துரைராஜ் மற்றும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.