சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில், அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன்கள் பாகன்பூசாரி (24) மற்றும் சின்னக்கருப்பு (19). இவர்கள் இருவரும் ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்காக, சிவகங்கையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொண்ட இவர்கள் இருவரும், ஊருக்குத் திரும்பியுள்ளனர். இவர்கள் மதகுபட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே காரைக்குடியிலிருந்து வந்த கார் மோதியது. இதில், பாகன்பூசாரி, சின்னகருப்பு ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டதில், சின்னக்கருப்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த பாகன்பூசாரியை அப்பகுதியினர் மீட்டு, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின்பேரில், மதகுபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.