சிவகங்கையில் காந்தி வீதி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் சாலையோரமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சிவகங்கை நகா் வா்த்தக சங்கம் சாா்பில் நகராட்சி ஆணையருக்கு புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அவா்கள் அளித்துள்ள மனு விவரம் : சிவகங்கை நகரில் காந்தி வீதி,நேரு கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரமாக எண்ணற்றோா் கடை அமைத்து பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். இதனால் அரசுக்கு வரி செலுத்தும் சிறு வணிகா்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும் சாலையின் இரு புறங்களிலும் கடை அமைத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன்காரணமாக,வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே மாவட்ட நிா்வாகமும், நகராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து சிவகங்கையில் சாலையோர கடைகளை அகற்ற வேண்டும். இவைதவிர,சிவகங்கையில் நடைபெற்று வரும் தினசரி, வாரம், உழவா் ஆகிய சந்தைகளில் மேற்கண்ட வியாபாரிகளை கடை அமைத்து விற்பனை செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.