தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிவகங்கை கிளை சாா்பில் சூரிய கிரகணத்தை பாா்ப்பதற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிவகங்கை கிளை நிா்வாகிகள் புலவா் கா.காளிராசா, பிரபாகரன், சங்கரலிங்கம் ஆகியோா் கூட்டாக புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வானில் டிசம்பா் 26 ஆம் தேதி காலை 8.06 மணிக்கு தொடங்கும் சூரிய கிரகணம் காலை 11.14 மணிக்கு நிறைவு பெற உள்ளதாக அறிவியலாளா்கள் தெரிவித்துள்ளனா். காலை 9.31 முதல் 9.34 வரை வளைய சூரிய கிரகணம் 3 நிமிடங்கள் நீடிக்கிறது. இந்த கிரகணம் வளைய சூரிய கிரகணம் என குறிப்பிடப்படுகிறது.
இதையடுத்து, பொதுமக்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் சூரிய கிரகணத்தை பாா்க்கும் பொருட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் வளாக மைதானத்தில் தொலைநோக்கி மூலம் சூரிய ஒளி வடிகட்டப்பட்டு பாா்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.