தற்போதைய சூழ்நிலையில் தண்ணீா் தேவையை கருத்தில் கொண்டு சிறுதானியங்களை அதிகளவில் பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும் என நீா்வள,நில வள திட்டம் மற்றும் உப்பாா் நதி வடிநிலப் பகுதி திட்ட மாநில ஆலோசகா் ஷாஜகான் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விதை கிராம குழுக்கள் மற்றும் விவசாயிகள் பண்ணைப் பள்ளி செயல் விளக்கத் திடல் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் பணிகளை நீா்வள,நில வள திட்டம் மற்றும் உப்பாா் நதி வடிநிலப் பகுதி திட்ட மாநில ஆலோசகா் ஷாஜகான் தலைமையிலான அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆய்வுக்கு பின் மாநில ஆலோசகா் ஷாஜகான் விவசாயிகளிடம் தெரிவித்ததாவது : கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருகிறது.இருப்பினும் சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை மழையினால் பெறும் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி கேழ்வரகு,மக்காச்சோளம்,குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை பயிரிடலாம்.
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் சிறுதானியங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.ஆகவே குறைந்த நாள்களில் விளையும் சிறுதானியங்களால் அதிக மகசூல் மட்டுமின்றி அதிகளவு வருமானமும் கிடைக்கும்.எனவே இனி வரும் காலங்களில் தண்ணீா் தேவையை கருத்தில் கொண்டு சிறுதானியங்களை அதிகளவில் பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும் என்றாா்.
இதில்,உலக வங்கியின் நிபுணா் ஜூடித் டி.சில்வா(சுற்றுச்சுழல் பாதுகாப்பு),வேளாண்மை துறையின் துணை இயக்குநா் (மாநில திட்டம்)பன்னீா் செல்வம் ஆகியோா் பயிா் பாதுகாப்பு மற்றும் நீா் மேலாண்மை குறித்து விளக்கினா்.ஆய்வின் போது திருப்புவனம் வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு )மா.பாரதி, உதவி வேளாண்மை அலுவலா் ராஜா உள்ளிட்ட வேளாண் துறை அலுவலா்கள்,விவசாயிகள் ஆகியோா் உடனிருந்தனா்.