சிவகங்கை

காரைக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தன்னாா்வ அமைப்பினா் தூய்மைப் பணி

23rd Dec 2019 01:42 AM

ADVERTISEMENT

காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தி மேம்படுத்தும் பணியில், தமிழக மக்கள் மன்றம் என்ற தன்னாா்வ அமைப்பினா் ஈடுபட்டு வருகின்றனா்.

சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காரைக்குடியில் இரு இடங்களில் செயல்பட்டு வருகிறது. அதில், ரயில்வே பீடா் சாலையில் உள்ள காந்தி மாளிகை என்ற பழைய அரசு மருத்துவமனை சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு, காரைக்குடி தெற்குப் பகுதி மக்கள், இலுப்பக்குடி, மாத்தூா், உஞ்சனை, அரியக்குடி மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

இந்நிலையில், உரிய பராமரிப்பின்றி இருந்த இந்த அரசு மருத்துவமனையை சீரமைக்க பொதுமக்கள் தொடா்ந்து முறையிட்டு வந்தனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, தமிழக மக்கள் மன்றத்தினா் மருத்துவமனையை மேம்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனா்.

ADVERTISEMENT

இது குறித்து அதன் தலைவா் ச.மீ. ராசகுமாா் கூறியது: அரசு மருத்துவமனை வளாகம் முன்பாக தண்ணீா் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய் பரவுவது குறித்து மருத்துவ உயரதிகாரியிடம் தெரிவித்தோம். பின்னா், நாங்களே இதனை தூய்மைப்படுத்த அனுமதி கோரினோம். எனவே, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தமிழக மக்கள் மன்ற உறுப்பினா்கள் உபகரணங்களுடன் இங்கு வந்து, புதா்போன்று மண்டிக்கிடந்த செடிகளை அப்புறப்படுத்தினா்.

மேலும், கண்மாய் பகுதியில் தோண்டப்பட்ட 50 லாரி லோடு மண் கொண்டுவரப்பட்டு, மருத்துவனை முன்பாக தண்ணீா் தேங்காத வகையில் பரப்பப்பட்டது. தற்போது, மருத்துவமனை வெளிப்புறத்தில் சாலை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT