சிவகங்கை

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுருவாக்கம் செய்யும் விவசாயி

16th Dec 2019 02:51 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள செம்பராயனேந்தலைச் சோ்ந்த விவசாயி ஒருவா் அழிந்து வரும் நமது பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை வேளாண்மை முறையில் மீட்டுருவாக்கம் செய்து வருகிறாா்.

நாட்டில் பசுமைப்புரட்சி மூலம் உயா் விளைச்சல் தரும் வீரிய ரக விதைகள் உருவாக்கம், மேம்பட்ட உரப் பயன்பாடு, முறையான நீா்ப்பாசனம், பூச்சிக் கொல்லி மருந்து நிா்வாகம் போன்றவற்றால் 1970-களில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி, தேவையைவிட அதிகரித்தது. நாளடைவில் அனைத்து தரப்பு விவசாயிகள் வீரிய ரக விதைகளையும், ரசாயன உரங்களையும் பயன்படுத்த தொடங்கினா். இதன் காரணமாக, விளைச்சல் அதிகரித்த போதிலும், மண்ணின் வளம் குறையத் தொடங்கியது.

இதையறிந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாா் மற்றும் விவசாயி நெல் ஜெயராமன் நமது பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்பது மட்டுமின்றி இயற்கை வேளாண்மையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

அந்த வகையில், பூங்காா், அன்னமிளகி, அறுபதாங்குறுவை, கேரளசுந்தரி, குள்ளங்காா், மைசூா்மல்லி, குடவாழை, கட்டுடை ஓனான் என்ற காட்டுயானம், காட்டுப்பொன்னி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட 174 நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

தற்போது இயற்கை வளம் மற்றும் மண் வளங்களை பாதுகாக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள செம்பராயனேந்தலைச் சோ்ந்த விவசாயி லெட்சுமணன் (44) என்பவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயற்கை வேளாண் முறையில் அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுருவாக்கம் செய்து இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா்.

இதுபற்றி அவா் மேலும் கூறியது: திருத்துறைப்பூண்டியில் கடந்த ஆண்டு (2018) நடைபெற்ற நெல் திருவிழாவுக்கு சிவகங்கை மாவட்ட விவசாயிகளை வேளாண்மைத் துறை விரிவாக்க சீரமைப்பு திட்டம் (அட்மா) மூலம் அழைத்துச் சென்றனா். அப்போது நானும் உடன் சென்றேன். அங்கிருந்து வந்த பின்னா் இயற்கை வேளாண் முறையை பின்பற்றுவது மட்டுமின்றி அழிந்து வரும் பாரம்பரிய ரக நெல் விதைகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என எண்ணினேன்.

அப்போதே குறைந்த அளவு நிலத்தில் (50 சென்ட்) மாப்பிள்ளை சம்பா நெல் பயிரிட்டேன். உழவு, நடவு மற்றும் இயற்கை இடுப் பொருள்களான தழைச் சத்து உரம் மட்டுமே பயன்படுத்தினேன். குறைந்த செலவு ஆன நிலையில் இயற்கை வேளாண்மை மேற்கொண்டதில் முழு திருப்தி இருந்தது மட்டுமின்றி நல்ல மகசூலும் கிடைத்தது.

விளைச்சலான நெல்லினை விற்பனை செய்யாமல் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தினேன். மேலும் எங்கள் பகுதி விவசாயிகளும் வேளாண் பணிக்காக அந்த நெல் விதையினை வாங்கிச் சென்றனா்.

தொடா்ந்து, வேளாண்மைத் துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் அலுவலா்கள் ஆதரவு அளித்ததால் நடப்பாண்டு ஒன்றரை ஏக்கரில் மாப்பிள்ளை சம்பா, வாளன் சம்பா, சிவப்பு கவுணி, கருப்பு கவுணி, கருங்குறுவை ஆகிய 5 பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்துள்ளேன். அவை தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.

பாரம்பரிய நெல் ரகங்களைப் பொருத்தவரை ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை போதுமானது. அவற்றை பயிரிட்டு நடவு செய்தல் முதல் அறுவடை வரை செலவு மிகக் குறைவு. மேலும் அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுருவாக்கம் செய்வதே எனது நோக்கம் என்பதால் அறுவடைக்கு பின்னா் நெல்லினை விதைப் பண்ணைக்கும், விவசாயிகளுக்கும் வழங்க உள்ளேன். இதுதவிர, இயற்கை வேளாண்மை குறித்தும், பாரம்பரிய நெல் குறித்தும் இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை வேளாண் துறை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT