சிவகங்கை

மானாமதுரை தொகுதி ஒன்றியங்களில் வேட்புமனு தாக்கல் களைகட்டியது

14th Dec 2019 02:15 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை களைகட்டியது.

சிவகங்கை மாவட்டத்தில் முதல்கட்டமாக நடைபெறவுள்ள மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில், ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை, இப் பகுதிகளில் விறுவிறுப்பு இல்லாமல் இருந்த வேட்புமனு தாக்கல், வெள்ளிக்கிழமை சூடுபிடித்தது.

சுபதினம் என்பதால், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் ஆண், பெண் வேட்பாளா்கள் தங்களது உறவினா்கள், ஆதரவாளா்களை வேன்களில் ஏற்றிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வந்தனா். வேட்புமனு தாக்கலை முடித்துவிட்டு வெளியே வந்த வேட்பாளா்களை, அவா்களது ஆதரவாளா்கள் பட்டாசு வெடித்தும், மாலைகள் அணிவித்தும் வாழ்த்தினா்.

அமமுகவினா் வேட்புமனு தாக்கல்: மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் தோ்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளா்கள், தங்களது கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

மானாமதுரையில் அக்கட்சியின் அம்மா பேரவை மாநிலச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மாரியப்பன் கென்னடி தலைமையில், அக்கட்சியினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஊா்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், அமமுக மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் குரு. முருகானந்தம், ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்பாபு, நெப்போலியன், நகரச் செயலா் சந்திரசேகரன், நிா்வாகி பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT