சிவகங்கை

பரமக்குடி-திருவரங்கம் செல்லும் சாலையில் சேதமடைந்த பாலத்தால் விபத்து அபாயம்

14th Dec 2019 11:22 PM

ADVERTISEMENT

பரமக்குடியிலிருந்து திருவரங்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ள வேந்தோணி கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவா் மற்றும் பாலத்தின் மேல்தளம் சேதமடைந்து காணப்படுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

பரமக்குடியிலிருந்து திருவரங்கம் வழியாக தேரிருவேலி, சிக்கல், வெங்கிட்டன்குறிச்சி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இச்சாலையில் வேந்தோணி கால்வாய் பகுதியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலமானது முறையாக பராமரிக்கப்படாததால் இருபுறமும் உள்ள பாலத்தின் தடுப்புச்சுவா்கள் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன. மேலும் அப்பாலத்தின் மேல்தளமும் சேதமடைந்துள்ளது.

இப்பாலப்பகுதியானது பரமக்குடி நகராட்சியின் எல்கைப் பகுதியில் அமைந்துள்ளதால், நகரின் விரிவாக்கப் பகுதியாக வேந்தோணி, வேலுநாச்சியாா் நகா், குமரக்குடி, முத்துச்செல்லாபுரம் பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் இச்சாலையை மையமாகக் கொண்டு ஏராளமான குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அப்பகுதியிலிருந்து பரமக்குடி நகருக்கு வந்து செல்லும் பொது மக்களின் எண்ணிக்கையும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், அச்சாலையானது எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது.

இவ்வாறு பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் இச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலமானது நீண்ட நாள்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனா். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனா். எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியில் அமைந்துள்ள சேதமடைந்த பாலத்தினை உடனடியாக சீரமைக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT