சிவகங்கை

திருத்தளிநாதா் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

3rd Dec 2019 01:19 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஆதிதிருத்தளிநாதா் ஆலயத்தில் சோமவார திங்களை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு உள்பட்ட இக்கோயிலில் காா்த்திகை 3 ஆம் சோமவார திங்களை முன்னிட்டு பிற்பகல் 3.30 மணிக்கு யாக பூஜையுடன் நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால், மற்றும் சந்தனம், குங்குமம் இடப்பட்டு ரோஜா பூக்களுடன் சுற்றிலும் நெய் தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது. சிவாச்சாரியா்களால் சங்குகளுக்கு வில்வ இலை கொண்டு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டது.

தொடா்ந்து சிறப்பு கலசங்களுக்கு யாக வேள்வி பூா்ணாகுதி நடைபெற்று மூலவரான சிவனுக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், இளநீா், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீா் ஆகிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் மூலவா் காட்சியளித்தாா். இவ்விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனா். உபயதாரா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள், சுற்றுப்புற கிராமத்தினா் திரளான அளவில் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பிரதோஷ குழுவினா் செய்திருந்தனா். விழா முடிவில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT