தோல்விகளை பொருள்படுத்தாமல் கடின உழைப்பின் மூலம் மாணவர்கள் வெற்றி பெறலாம் என சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியின் தலைவர் சேதுகுமணன் பேசினார்.
சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் பி.ஹேமலதா தலைமை வகித்தார்.
இதில்,சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியின் தலைவர் சேதுகுமணன் கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசியது : சிவகங்கை மண் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதியாகும். இங்கு கல்வி பயிலும் அனைவரும் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கலாம். இன்றைய கல்வி நிலை வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் அமைய வேண்டும்.நல்ல ஆசிரியர்களின் வழிகாட்டுதலை இன்றைய மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.
இனி வரும் காலங்களில் அனைத்து நிலை வளர்ச்சியிலும் அறிவியல் முக்கிய பங்காற்றும். அத்தகு சூழலுக்கு இன்றைய இளம் தலைமுறையினர் தயாராக வேண்டும்.தோல்விகளை பொருள்படுத்தாமல் முயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் வெற்றி பெறலாம் என்றார்.
இக்கருத்தரங்கில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டி.தமிழ்ச்செல்வன், ஓமன் நாட்டின் நிசவா கல்லூரியின் பேராசிரியர் ஏ.நசீர் அகமது, புதுக்கோட்டை ராஜா கல்லூரியின் பேராசிரியர் ஆர்.முத்துராஜ் ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சியில் கணிதவியல் துறைத் தலைவர் சகாய அமல்ராஜ், ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், இணை அமைப்பாளர் பழனி, துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கட்டுரையாளர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.