சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் ஆழிமதுரை ஊராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளை சிறைப்பிடித்து பூட்டிய சம்பவத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநில செய்தித் தொடர்பாளர் ரா.அருள்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஆழிமதுரை கிராமத்தில் கடந்த ஆக. 24 ஆம் தேதி தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மனுக்களைப் பெற வந்திருந்த துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோரை பொதுமக்களில் சிலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறை பிடித்து பூட்டியுள்ளனர்.
சட்ட விரோதமான இச்செயலை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் நேர்மையாக பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கேட்டுக் கொள் கிறது என்று தெரிவித்துள்ளார்.