தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூரில் அரசின் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூரில் கடந்த சில மாதங்களாக உயர் மின் அழுத்த கம்பிகளில் பழுது ஏற்பட்டு அடிக்கடி மின்சார தடை ஏற்பட்டு வந்ததாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவேகம்பத்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசின் அனுமதி மற்றும் முன்னறிவிப்பின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி உள்பட 10 பேர் மீது திருவேகம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.