தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்பும் வியாபாரிகள், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க விரும்பும் வியாபாரிகள், அதற்கான விற்பனை உரிமம் பெறுவது அவசியமாகும்.
அந்த வகையில், தற்காலிக பட்டாசு கடை விற்பனை உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் வியாபாரிகள், விண்ணப்பப் படிவத்துடன் புல நீல வரைபடம், பத்திர ஆவணங்கள், பான் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செலுத்திய வரி ரசீது, மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட தேதிக்குள் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
அதன்பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது, தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னதாக விற்பனை உரிமத்துக்கான ஆணைகள் பிறப்பிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.