பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 85 சதவீத மருத்துவர்கள் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பணிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அந்த வகையில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் 85 சதவீதம் பேர் கலந்து கொண்டனர். இருப்பினும்,போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் தவிர, மீதமுள்ள குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவர்களை கொண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகிய துறைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவர்களின் போராட்டத்தால் இயல்பு நிலை பணிகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. இதுதவிர, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும்பாலானோர் பணிக்கு செல்லவில்லை. இதனால் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.