சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரசு அதிகாரிகளைச் சிறைபிடித்த வழக்கில் செவ்வாய்க்கிழமை 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கோயில் மற்றும் மயானத்திற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதைக் கண்டித்து அக்கிராமமக்கள் சில வாரங்களுக்கு முன், வால்போஸ்டர் ஒட்டினர்.
இதையடுத்து அவர்களை சமரசப்படுத்திய அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் ஆகஸ்டு 24-ஆம் தேதி முதல்வர் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தி மனு வாங்க மண்டல துணை வட்டாட்சியர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா ஆகியோர் ஆழிமதுரைக்கு வந்தனர்.
ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்தபோது, அவர்களை உள்ளே வைத்து கிராம மக்கள் கதவை மூடி பூட்டினர். இதையடுத்து வட்டாட்சியர் பாலகுரு, சார்பு-ஆய்வாளர் மாணிக்கம் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை திறந்து அதிகாரிகளை மீட்டனர். இதுகுறித்து ஆழிமதுரையைச் சேர்ந்த 20 பேர் மீது இளையான்குடி போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில் 3 நாள்கள் கழித்து செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீடு புகுந்து ரவிச்சந்திரன் (42), மலைச்சாமி (40) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.