சிவகங்கை

மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்தில் தொங்கிய இளைஞரை மீட்ட ஆட்சியர்

23rd Aug 2019 07:08 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வியாழக்கிழமை மின்கம்பத்தில் ஏறி சிக்கிக்கொண்ட இளைஞரை, மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
      திருப்பத்தூர் அருகே அரளிக்கோட்டை பகுதியிலுள்ள சிலந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமையா மகன் சண்முகம் (32). இவர், கிராமத்தில் ஏற்படும் சிறு சிறு மின் பழுதுகளை சரிபார்ப்பதற்காக தினக்கூலியாக, மின்வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். 
      இந்நிலையில் இவர், வியாழக்கிழமை ஜமீன்தார்பட்டி பகுதியில் மின்தடை ஏற்பட்டிருந்ததை சரிசெய்வதற்காக, அரளிக்கோட்டையில் உள்ள மின்மாற்றியின் செயல்பாட்டை நிறுத்திவிட்டு, ஜமீன்தார்பட்டி செல்லும் வழியில் உள்ள மின்கம்பத்தில் ஏறியுள்ளார். ஆனால், அந்த மின்கம்பம் மதகுபட்டி பகுதியில் இணைக்கப்பட்டு, மின்சாரம் சென்றுகொண்டிருந்துள்ளது. இதை அறியாத சண்முகம், மின் கம்பியை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து கம்பியில் தொங்கியவாறு உயிருக்குப் போராடியுள்ளார். 
     இதைக் கண்ட அப்பகுதியினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். அப்போது,  அவ்வழியாகச் சென்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன், உடனடியாக சிவகங்கை மின் நிலையத்துக்கும், திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், பொதுமக்கள் உதவியுடன் மின்கம்பத்தில் தொங்கிய சண்முகத்தை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 
    பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, மின்வாரியத்தால் இவரைப் போன்று ஏராளமானோர் கிராமங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கு எவ்வித தற்காப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை.
  மேலும், இவர்கள் போதிய பயிற்சியும் இல்லை என்பதால், அவ்வப்போது இம்மாதிரியான விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, மின்வாரிய காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு முன்வரவேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT