சிவகங்கை

காரியாபட்டியில் சரக்கு வாகனத்தை திருடிய 3 பேர் கைது

23rd Aug 2019 07:10 AM

ADVERTISEMENT

காரியாபட்டியில் பெட்ரோல் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை திருடிச் சென்ற மூன்று பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை போலீஸார் மீட்டு வந்தனர். 
காரியாபட்டி அருகே உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் ஞானமுத்து. இவர் தனது சரக்கு வாகனத்தை புதன்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனையகத்தில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வாகனத்தை எடுப்பதற்காக வந்தபோது,  வாகனத்தை காணவில்லையாம். 
இதையடுத்து ஞானமுத்து காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், பெட்ரோல் விற்பனையகத்திலிருந்த கண்காணிப்புக் கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மதுரை மாவட்டம் நெடுமதுரையை சேர்ந்த வெள்ளையன் (39), தமிழரசன் (32) ஆகியோர் ஞானமுத்து வாகனத்தை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. 
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்ததில்,  வாகனத்தை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளத்தை சேர்ந்த தேவதாஸ் (52) என்பவரிடம் விற்பனை செய்திருந்தது தெரியவந்தது. 
இதையடுத்து நாகர்கோவில் சென்ற போலீஸார், தேவதாஸை கைது செய்து சரக்கு வாகனத்தை மீட்டனர். தேவதாஸ் சரக்கு வாகனத்தின் நிறத்தை மாற்றி விற்பனைக்காக கேரளத்துக்கு கொண்டு செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT