மானிய விலையில் தையல் இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.24 லட்சத்து 22 ஆயிரத்து 400 மோசடி செய்த இளைஞரை சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் தீபாம்பிகை(39).இவரிடம் காரைக்குடியைச் சேர்ந்த கஸ்தூரி, ராதிகா, சுந்தரம், சுரேஷ், ஜோதிபாண்டீஸ்வரன் (31) ஆகியோர் தனியார் அறக்கட்டளை மூலம் தையல் பயிற்சி கற்றுத் தருவதாகவும், பயிற்சியை நிறைவு செய்யும் போது மானிய விலையில் தையல் இயந்திரம் வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய தீபாம்பிகை உள்பட ஏராளமானோர் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.24 லட்சத்து 22ஆயிரத்து 400 பணத்தை நேரடியாகவும், வங்கிக் கணக்கு மூலமாகவும் கொடுத்தனராம். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள் தையல் இயந்திரம் வாங்கி தரவில்லையாம். பணத்தை திருப்பிக் கேட்டாலும் எந்தவிதமான பதிலும் இல்லையாம்.
இதுகுறித்து தீபாம்பிகை சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை செய்த குற்றப்பிரிவு போலீஸார் கஸ்தூரி, ராதிகா உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து,காரைக்குடி முத்து நகரைச் சேர்ந்த ஜோதிபாண்டீஸ்வரன் என்பவரை சனிக்கிழமை கைது செய்தனர்.