சிவகங்கை

கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள்: தொல்லியல் துறை ஆணையர் நேரில் ஆய்வு

18th Aug 2019 03:18 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
கீழடியில் 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை பரிசோதித்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை சார்பில் 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர், மத்திய தொல்லியல் துறை  தனது அகழாய்வுப் பணியை அத்துடன் நிறுத்திக் கொண்டது. 
இதையடுத்து, தமிழக தொல்லியல் துறை  4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு, ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக தமிழக அரசு ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அகழாய்வுப் பணிகள், தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 பேரின் நிலங்களில் 27 இடங்களில் அகழாய்வுக்காக தோண்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து  மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை உள்ளிட்ட 675 -க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும்,  இந்த அகழாய்வில் அதிகளவில் பலவகை சுவர்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தொல்லியல் துறையின் மாநில ஆணையர் உதயச்சந்திரன் கீழடிக்கு வந்து அகழாய்வு நடைபெறும் பகுதியை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அகழாய்வுப் பணிகள் குறித்து அலுவலர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT