சிவகங்கை

அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடைய உரிய நடவடிக்கை: கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் உறுதி

16th Aug 2019 07:49 AM

ADVERTISEMENT

மத்திய,மாநில அரசின் திட்டங்கள் முழுவதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
 சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கோவானூர் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது :  
 கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலானோர் மேற்கொண்ட வேளாண் மற்றும் அதோடு தொடர்புடைய கால்நடை வளர்ப்பு தொழில் மிகவும் பாதிக்கும் சூழல் நிலவி வருகிறது.
இனி வரும் காலங்களில் குடிநீர் மற்றும் வேளாண் பணிகள் பாதிக்காத வகையில் மழை நீரை சேமித்து வைக்கும் பொருட்டு வரத்துக் கால்வாய்கள், கண்மாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வார தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,நடப்பாண்டு நமது மாவட்டத்தில் 109 கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், சிவகங்கை மாவட்டம் முழுவதும் நகர் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள குளங்கள்,ஏரிகள் ஆகியவற்றை தூர்வாரும் பணியும் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் அதாவது செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக என்னைச் சந்தித்து தகவல் அளிக்கலாம்.
கிராமப்புற வளர்ச்சியை கணக்கில் கொண்டு ஒரு தேசத்தின் வளர்ச்சியை கணக்கிட முடியும். ஆகவே தான் கிராமப் புறங்களில் வாழும் மக்கள் அடிப்படை தேவைகளான வீடு, குடிநீர், சாலை வசதி, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மத்திய,மாநில அரசுகள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.
அரசின் திட்டங்கள் முழுவதும் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
 இதேபோன்று,காளையார்கோவிலில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றுப் பேசினார். 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஜயநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், ரஜினிதேவி, தாயுமானவன், இளங்கோவன், உதவிப்பொறியாளர் ராஜா உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT