சிவகங்கையிலிருந்து மானாமதுரைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை நகர் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட அனைத்து துறையின் தலைமை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, அரசு மகளிர் கலைக் கல்லூரி, தனியார் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மானாமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள், அலுவலர்கள்,தொழிலாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பணி நிமித்தமாக தினசரி சிவகங்கைக்கு வந்து செல்கின்றனர். இதுதவிர பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர்.
சிவகங்கையிலிருந்து மானாமதுரைக்கு குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள்,மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சிவகங்கை-மானாமதுரைக்கு இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், அந்த வழித்தடத்தில் உள்ள வேம்பங்குடி, உருளி, சுந்தரநடப்பு, துவங்கல், கீழக்கண்டனி ஆகிய கிராமப் பொதுமக்களும் பேருந்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே சிவகங்கை-மானாமதுரை வழித்தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.