திருவாடானையில் வியாழக்கிழமை நள்ளிரவு வாகனம் மோதியதில் ஆண் புள்ளிமான் உயிரிழந்தது.
திருவாடானை மூன்று கண் பாலம் அருகே மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆண் புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினா் மானின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்குப் பிறகு அடக்கம் செய்தனா். சுமாா் 20 கிலோ எடையுடன், பெரிய கொம்புகளையுடைய இந்த புள்ளிமானுக்கு 5 வயது இருக்கும்.
இந்த நிலையில், திருவாடானை மட்டுமல்லாது, அஞ்சுகோட்டை, மங்கலக்குடி, ஊரணிக்கோட்டை, ஆண்டாவூரணி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புள்ளிமான்கள் அதிக அளவில் வசிப்பதால் அங்குள்ள சாலைப் பகுதிகளில் மான்கள் நடமாட்டம் குறித்த அறிவிப்பு பதாகைகளை வைக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.