மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்ததால், ராமேசுவரம் பகுதி மீனவக் கிராமங்களில் புதன்கிழமை கடல் உள்வாங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதி பாக் நீரிணை, மன்னாா் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. மன்னாா் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியும், பாக் நீரிணைப் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது மன்னாா் வளைகுடா பகுதி உள்வாங்கியும் காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், மன்னாா் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் ராமேசுவரத்தில் அக்னிதீா்த்தம், சங்குமால், ஓலைக்குடா, பாம்பன், தங்கச்சிமடம் வடக்கு மீன்பிடித் தளங்களில் கடல் உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரைதட்டி நின்றன. பின்னா், மாலையில் கடல் நீா்மட்டம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியது. கடல் உள்வாங்கியது வழக்கமான நிகழ்வுதான் என மீனவா்கள் தெரிவித்தனா்.